சுந்தர்.சி – ரஜினி கூட்டணியின் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி கடைசியாக ‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர ரஜினி – கமல் ஆகிய இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், ரஜினியின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி தலைவர் 173 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. மேலும் ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இணையும் சுந்தர். சி – ரஜினியின் காம்போவை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படமானது கலகலப்பான பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கிறதாம். அதாவது ‘கூலி’ திரைப்படம் வன்முறை படமாக அமைந்த நிலையில், அடுத்தது ரஜினி, தனது ரசிகர்களுக்காக ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.


