சிவகார்த்திகேயன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பினால் வெள்ளித்திரைக்கு வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதிலும் ‘அமரன்’ திரைப்படம் இவருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்து இந்திய அளவில் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. எனவே இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் அதற்கு முன்பாக வெளியான ‘மதராஸி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சரிவை சந்தித்தது. இது தவிர சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களது கூட்டணியிலான புதிய படமானது சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாக இருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பிறகு தொடங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்க உள்ள படம் வித்தியாசமானதாக இருக்கும் என்றும், சிவகார்த்திகேயன் இதுவரை பண்ணாத கேரக்டரில் நடிப்பார் என்றும் கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார். அது மட்டுமில்லாமல் அனிருத் தான் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் பல தகவல்கள் உலா வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ.70 கோடியாக அதிகப்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டது. அதேபோல் ‘பராசக்தி’ படத்தில் சம்பளமே இல்லாமல் நடிக்கிறார் என்றும் அதற்கு பதிலாக அவர், அந்த படத்திற்கு கிடைக்கும் லாபத்தில் பங்கு கேட்டிருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ‘மதராஸி’ படத்தின் தோல்வியின் காரணமாக தான் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க ரூ.70 கோடியில் இருந்து ரூ.40 கோடிக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


