டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் 1ம் தேதி சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் வெளியானது. எதார்த்தமான திரைக்கதையில் வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. எனவே அடுத்ததாக அபிஷன் என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இவர், தனுஷிடம் கதை சொன்னதாகவும் அவரை வைத்து புதிய படம் இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் அபிஷன் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை மதன்குமார் இயக்குகிறார். இப்படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் படத்தின் பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.