லோகா சாப்டர் 1 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர், தனது வேப்பரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய படங்களை தயாரிக்கிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவருடைய தயாரிப்பில் லோகா சாப்டர் 1: சந்திரா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை டோமினிக் அருண் இயக்கியிருந்தார். சூப்பர் ஹீரோ ஜானரில் வெளியான இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து நஸ்லேன், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் இந்திய அளவில் முக்கியமான சூப்பர் ஹீரோ படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலக அளவில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படம் தற்போது வரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. அதாவது மலையாள சினிமாவிலேயே ரூ.300 கோடியை கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ‘லோகா சாப்டர் 2’ திரைப்படமும் உருவாக இருக்கிறது. இதில் டோவினோ தாமஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ‘லோகா சாப்டர் 1’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படம் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.