நடிகை அனுபமா பரமேஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து பேசி உள்ளார்.
மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி, சைரன், டிராகன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் திரைப்படத்தில் கிராமத்து பெண்மணியாக, துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் கலந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன், மாரி செல்வராஜ் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “என்னுடைய கேரியரில் ‘பைசன்’ படம் மிகவும் முக்கியமான படம். இதுவரை நான் நடித்த எல்லா படங்களிலும் இது உண்மையிலேயே வித்தியாசமானது. இந்த படத்தின் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பல சவால்களுடன் நடித்தேன். இயக்குனர் மாரி செல்வராஜ் எதார்த்தமான நடிப்பை எதிர்பார்க்கிறார்.
கடினமான சூழ்நிலைகளில் துருவ் மற்றும் ரஜிஷா ஆகியோர் எனக்கு ஆதரவாக இருந்தனர். ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிப்பது எனக்கு கடினமாக இருந்தது. ரஜிஷாவும் நானும் ஒருமுறை ஒரே ஷாட்டுக்கு 52 டேக்குகள் எடுத்தோம். நான் மாரி செல்வராஜ் சார் படங்களின் மிகப்பெரிய ரசிகை. பைசன் அனுபவத்தின் மூலம், திரையில் நாம் பார்த்து ரசிக்கும் வகையான கடின உழைப்பு தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன். அந்த முயற்சி அனைத்தும் எனக்கு முழு திருப்தியை தந்தது. ஒரு டேக்கிற்கு சரி என்று மாரி சார் சொன்னபோது அது ஒரு விருதை வாங்கியது போல் இருந்தது.
படத்தை எடிட் செய்யும்போது மாரி சார் என்னிடம் ஏன் இது போன்ற படங்களில் நீங்கள் நடிக்கவில்லை? யாரும் உங்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று சொன்னார். அவருடைய அந்த வார்த்தை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. நான் இதற்கு முன்பாக இது போன்ற படத்தில் நடித்ததில்லை. படப்பிடிப்பின் போது மாரி செல்வராஜ் சாரிடமிருந்து இது போன்ற வார்த்தைகளை கேட்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.