பராசக்தி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய 25 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். ரவி கே சந்திரன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் இதில் வில்லனாக நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாகவும், தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் 2026 ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா சௌத் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது.