கல்கி 2898AD இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் நாக் அஸ்வின் அப்டேட் கொடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருந்தார். மகாபாரதக் கதையை தழுவி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், அன்னா பென், மிர்ணாள் தாகூர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் கல்கி 2898AD படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குனர் நாக் அஸ்வின் கொடுத்துள்ளார். அதாவது முதல் பாகத்தில் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணராக நடித்திருந்தாலும் அவருடைய முகம் காட்டப்பட்டிருக்காது.
எனவே இரண்டாம் பாகத்தில் கிருஷ்ணராக மகேஷ் பாபு நடிப்பார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேசிய நாக் அஸ்வின், “கிருஷ்ணர் கதாபாத்திரம் திரையில் அதிக நேரம் தோன்றும் என்றால் அதற்கு நடிகர் மகேஷ்பாபு பொருத்தமானவராக இருப்பார். அந்த படம் பெரிய அளவில் வசூலிக்கும். ஆனால் கல்கியின் பிரபஞ்சத்தில் கிருஷ்ணரின் முகத்தை காட்ட நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.