ஜெயிலர் 2 திரைப்படத்தில் பல மலையாள நடிகர்கள் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர் 2. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. எனவே ரசிகர்கள் பலரும் இதன் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி நெல்சன், ரஜினி, அனிருத் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 படம் தொடர்பான அறிவுப்பு டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே அட்டப்பாடியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கோழிக்கோடு பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இது தவிர இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் எஸ்.ஜே. சூர்யாவும் இப்படத்தில் இணைந்திருப்பதாக சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் ஏகப்பட்ட மலையாள பிரபலங்கள் இணைந்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி மோகன்லாலுடன் சுராஜ் வெஞ்சரமூடு, சுனில் சுகடா, வினித் தட்டில் டேவிட், சுஜித் சங்கர், அன்னா ரேஷ்மா ராஜன், கோட்டையம் நஷீர் ஆகியோர் ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.