மாரி செல்வராஜ், தனுஷ் கூட்டணியின் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது இவரது இயக்கத்தில் பைசன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இது தவிர கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி நடிகர் தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
D56 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது வரலாற்று பின்னணியில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த நிலையில் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியிலான அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் D54, D55 ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்த பின்னரே D56 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி அனேகமாக இந்த படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்க வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.