தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ்.
அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன், வாழை ஆகிய படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது சமூகத்தில் சொல்லப்படாத, சொல்ல வேண்டிய விஷயங்களை தனது எதார்த்தமான திரைக்கதையின் மூலம் கொடுத்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். இவருடைய இயக்கத்தில் உருவாகியிருந்த ‘பைசன்’ திரைப்படம் நேற்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ், தனுஷின் 56வது படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படம் திரில்லர் ஜானரில் வரலாற்று படமாக உருவாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும், 2026 பிப்ரவரி மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தையும் இயக்குவதற்கு கமிட்டாகியுள்ளார் மாரி செல்வராஜ். அடுத்தது உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இதற்கிடையில் மாரி செல்வராஜ், ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார். மேலும் வாழை படத்தின் இரண்டாம் பாகத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறு ஏகப்பட்ட படங்களை தன்னுடைய லைன் அப்- இல் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இவருடைய படங்களில் பெரும்பாலும் வலுவான கண்டன்ட் இருப்பதன் காரணமாக இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


