மெய்யழகன் படத்தின் இயக்குனர் திரில்லர் படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ’96’ என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரேம்குமார். அதாவது ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில் காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக ஒரு மென்மையான படத்தை கொடுத்து பெயரையும் புகழையும் பெற்றார். அதைத் தொடர்ந்து இவர், இயக்கிய மெய்யழகன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படமும் அமைதியான, பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு அருமையான கதையாக இருந்தது. இதன் பிறகு பிரேம்குமார், ’96 பாகம் 2′, ‘சியான் 64’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் பிரேம்குமார் சமீபத்தில் நடந்த பேட்டியில் திரில்லர் கதையை எடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதன்படி அவர், “நான் இப்போது திரில்லர் கதையை எழுதுகிறேன். இந்த ஐடியா நான்கு வருடத்திற்கு முன்பாகவே எனக்கு இருந்தது. கூட இருக்கிறவங்க எல்லாரும் இந்த படத்தை மெதுவா எடுங்க. ஏன்னா இப்பதான் மென்மையான படம் கொடுத்துட்டு வர்றீங்க. அதை உடனே மாத்த வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதை மாத்தணும்னு தோணுச்சு. இந்த திரில்லர் கதையை பகத் பாசிலிடம் சொன்னேன். அவருக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. இது நேரடியான தமிழ் படம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் பிரேம்குமார் – பகத் பாசில் இணையும் புதிய படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என நம்பப்படுகிறது.