நடிகை நயன்தாரா தன்னுடைய 22 வருட திரைப்பயணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய நயன்தாரா மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்த நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது தவிர இவர் மலையாளம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மண்ணாங்கட்டி, ராக்காயி, ஹாய், டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக், பேட்ரியாட் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 22 வருட திரைப்பயணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “முதன் முதலில் நான் கேமரா முன் நின்று 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது எனக்கு தெரியாது சினிமா என்னுடைய காதலாக மாறும் என்று. ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும் என்னை வடிவமைத்து குணப்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த நெகழ்ச்சி பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.