இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையில் ஃபைட் கிளப் எனும் திரைப்படத்தை தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்.
அதே சமயம் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், ஒரு நடிகை மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில், பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் ஆல்பம் பாடல்களை உருவாக்குவதில் ஆர்வமுடையவர்.
இந்நிலையில் தான் சமீபத்தில் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இதனால் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் புதிய படத்தில் நடிக்கிறார்களா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தார்கள். இந்நிலையில் இது சம்பந்தமான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி நடிகை ஸ்ருதிஹாசன் தானே பாடி இசையமைத்துள்ள புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பு தான் அது. இந்த ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆல்பம் பாடல் காதலர்களுக்கான ரொமான்ட்டிக் பாடலாக உருவாகிறதாம். சமீபத்தில் இதன் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றதாகவும் காதலர் தினத்தில் இந்த ஆல்பம் பாடல் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.