திரைப்பட வளர்ச்சித்துறை எந்த உதவியும் செய்யவில்லை – ‘ஒன் மேன்’ படத்தை யூடியூப்பில் வெளியிட முடிவு!
வெங்காயம்’ படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், உலகிலேயே முதன்முறையாகத் திரைப்படத்தின் 72 தொழில்நுட்பத் துறைகளையும் தனியொரு ஆளாகக் கையாண்டு உருவாக்கிய ‘ஒன் மேன்’ (ONE MAN) திரைப்படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், மனமுடைந்து மீண்டும் விவசாய வேலைக்கும் தெருக்கூத்துக்கும் செல்வதாக அறிவித்துள்ளார்.
72 துறைகள்… 5 ஆண்டுகள் உழைப்பு:
அறிவியல் புனைகதை (Sci-Fi) பாணியில் உருவான ‘ஒன் மேன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21 அன்று திரைக்கு வந்தது. உலகில் எந்த ஒரு திரைக் கலைஞரும் செய்திராத வகையில், எந்தவித உதவியாளர்களும் இன்றி தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, ஒலிப்பதிவு, கிராபிக்ஸ் என ஒரு படத்தை உருவாக்கத் தேவையான அனைத்து 72 துறைகளையும் சங்ககிரி ராஜ்குமார் என்ற ஒரே நபரே கையாண்டிருந்தார். இந்த அபாரச் சாதனைக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருந்தார்.

வியாபார ரீதியான தோல்வி & OTT புறக்கணிப்பு:
படம் திரைக்கு வந்து இவரது உழைப்பு பாராட்டப்பட்டாலும், வியாபார ரீதியாகப் படம் தோல்வியைச் சந்தித்தது. இதுகுறித்துத் தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருப்பதாவது:
“வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களில் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். இங்குள்ள ரசிகர்களும் திரையரங்குகளும் கமர்சியல் படங்களை எதிர்பார்க்கலாம்; ஆனால், அதற்காகத்தானே அரசின் ‘திரைப்பட வளர்ச்சித்துறை’ இருக்கிறது? அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியும், இந்த விசித்திரப் படைப்பை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லத் தமிழக அரசு எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை.
திரையரங்குகளில் 60 இடங்களிலாவது வெளியிட முடிந்தது. ஆனால், தமிழ்நாட்டில் அலுவலகமே இல்லாத OTT தளங்கள், ‘தியேட்டர் பிசினஸ்’ எப்படி இருந்தது என்றே கேட்கிறார்கள். திரையரங்குகளில் எப்படிப் புறக்கணிக்கப்பட்டோமோ, அதேபோல OTT-யிலும் புறக்கணிக்கப்படுகிறோம். ‘என்ன சொல்கிறார்கள்’ என்பதை விட ‘யார் சொல்கிறார்கள்’ என்பதைப் பார்த்துதான் இங்கு வாய்ப்பு தருகிறார்கள்.”
யூடியூப்பில் ரிலீஸ் & விவசாயத்திற்குத் திரும்புதல்:
மேற்கொண்டு OTT-யில் வெளியிட வழியில்லாததால், வரும் வியாழக்கிழமை ‘ஒன் மேன்’ திரைப்படத்தை யூடியூப்பில் (YouTube) இலவசமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், இனி மக்கள் பார்த்துத் தீர்மானிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “உலகில் யாருமே சிந்திக்க முடியாத ஒரு படைப்பைக் கொடுத்தும் அரசாங்கத்திடமிருந்தோ, மக்களிடமிருந்தோ அங்கீகாரம் கிடைக்காததால் பெரும் களைப்போடு இருக்கிறேன். இனி சில காலம் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த ஊருக்குச் சென்று காட்டு வேலை (விவசாயம்) செய்யவும், தெருக்கூத்து கலைக்குத் திரும்பவும் முடிவெடுத்துள்ளேன்,” என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
‘மண்டாடி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா கோலாகலம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய சூரி, படக்குழுவினர்!
