பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம்.

படுக்கை அறையில் கீழே விழுந்து, வாணி ஜெயராம் உயிரிழந்ததாக ஆயிரம் விளக்கு போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவித்தனர். மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமனின் வீட்டில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வாணி ஜெயராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உயிரிழந்த வாணி ஜெயராமனின் வீட்டில் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ் புக் சேகர் சஞ்சய் ஆய்வு மேற்கொள்கின்றார்.
இவரின் திடீர் உயிரிழப்பு இந்திய திரை உலகிற்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
1971 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் பிண்ணனி பாடகியாக நுழைந்த வாணி ஜெயராம் 10,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.

குடியரசு தினத்தை ஒட்டி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றவர் வாணி ஜெயராம்.
வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவர்.
அவர் பாடிய மேகமே மேகமே, மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் ஏன் கேட்கிறது போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதைவை.


