நடிகை பூஜா ஹெக்டே, தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து ‘பீஸ்ட்’, சூர்யாவுடன் இணைந்து ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் ரஜினியின் ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது இவர், துல்கர் சல்மானின் ‘DQ41’, விஜயின் ‘ஜனநாயகன்’, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

அதாவது தனுஷ், அடுத்ததாக ‘அமரன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தான் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படமானது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளன. ‘D55’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கிறார். சாய் அபியங்கர் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


