தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விடாமுயற்சி படம் 2024 மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்ததாக அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக ஏகே 63 என்று தலையிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்ததாகவும், வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஏகே 63 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை தபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஏகே 63 படத்தை விரைவில் முடித்துவிட்டு 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் எனும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்து இருந்தார். இவர்களின் காம்போ ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதே சமயம் அப்படத்தில் இடம்பெற்ற சந்தன தென்றலில் பாடல் இன்று வரையிலும் பலரின் ஃபேவரிட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.