அஜித், சூர்யா, விக்ரம், மோகன்லால் என பல நடிகர்களின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு குரல் கொடுத்த ஶ்ரீனிவாச மூர்த்தி (55) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார்.

குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். மேலும், இவர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ஆர்.மாதவனின் ‘ராக்கெட்ரி’ படத்துக்கு தெலுங்கில் டப்பிங் பேசியிருந்தார்.
1990 களில் இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் ஸ்ரீனிவாச மூர்த்தி தனது டப்பிங் வாழ்க்கையை தொடங்கினார். தெலுங்கு டப்பிங்கான ‘ஒக்கே ஒக்கடு’ படத்தில் அர்ஜூனுக்கு தெலுங்கில் குரல் கொடுத்து பிரபலமடைந்தார். அதன்பின் ஏராளமான படங்களுக்கு குரல் கொடுத்த இவர் கிட்டத்தட்ட 1,000 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு சினிமா பிரபலங்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பதாவது ” இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு. ஸ்ரீனிவாசமூர்த்தி உங்களுடைய குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. சீக்கிரம் சென்றுவிட்டார்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.