பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவருடைய நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2, சலார், கல்கி 2898AD ஆகிய படங்கள் அதிக வசூலை வாரிக் குவித்தன. இதன் பின்னர் ரசிகர்கள் பலரும் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் பிரபாஸின் Fauzi- ஃபௌசி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
ஏனென்றால் பிரபாஸ், துல்கர் சல்மான் நடிப்பில் ‘சீதாராமம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த ஹனு ராகவப்புடியுடன் கூட்டணி அமைத்து இருப்பதால் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படமானது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் இமான்வி, அனுபம் கெர், ஜெயபிரதா, மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகரின் இசையமைப்பிலும், சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவிலும் இந்த படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி இப்படமானது 2026 ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படமானது ஏற்கனவே 1940 காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் இந்த படம் 2026 சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


