பிரபாஸ் நடிக்கும் தி ராஜாசாப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் தற்போது தி ராஜாசாப் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை மாருதி இயக்கி வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்க கார்த்திக் பழனி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படமானது காமெடி கலந்த ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ் தவிர மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாட இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படமானது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.