SSMB 29 படக்குழு பிரித்விராஜின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
‘SSMB 29’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க, பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர் பிரத்விராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தவிர ரஜினிகாந்த், இதில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு ஒடிசா போன்ற மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அடர்ந்த காட்டுப்பகுதியிலும் இந்த படத்தின் சில காட்சிகள் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்திற்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது. அதே சமயம் படக்குழுவினர் 2025 நவம்பர் மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் பிரித்விராஜின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது நடிகர் பிரத்விராஜ் இப்படத்தில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்து வருவது போல் தெரிகிறது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்திலும் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்திருந்தது. அந்த வீடியோவில் மகேஷ் பாபு தாடியுடனும், பிரித்விராஜ் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்றும் இருந்தது. அதைப்போலவே தற்போது வெளியாகியுள்ள போஸ்டரிலும் பிரித்விராஜ், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவராக வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


