ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி- நெல்சன் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் உருவாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றி இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் இயக்குனர் நெல்சன் முதல் பாகத்தில் நிகழ்த்திய மேஜிக்கை இரண்டாம் பாகத்திலும் நிகழ்த்துவார் என நம்பப்படுகிறது. அதன்படி படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் 2026 ஜூன் 12ஆம் தேதி திரைக்கு வரும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினி அப்டேட் கொடுத்திருந்தார். இது தவிர இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்த ரஜினி, நெல்சனிடம் நாம் மீண்டும் இணைந்து ஜெயிலர் 3 அல்லது வேறொரு புதிய படத்தில் பணியாற்றுவோம் என கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது ரஜினியிடம் புதிய கதை ஒன்றை கூறியதாகவும், அந்த கதை பிடித்துப் போனதால் அதில் பணியாற்ற ரஜினி ஆர்வமாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையில் நெல்சன், ஜூனியர் என்டிஆர் – ஐ வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறாராம். எனவே அதன் பிறகு நெல்சன் – ரஜினி கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.