ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தெலுங்கு திரை உலகில் டாப் இயக்குனர்களில் ஒருவராக, அதாவது பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் புதிய படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ‘SSMB 29’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒடிசா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகிறது. இவ்வாறு இப்படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் ஆன்மீகத்தை மையமாக கொண்ட ஒரு கேமியோ ரோல் இருப்பதாகவும், அந்த ரோலில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது இந்த படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருப்பதை பற்றி அறிந்து கொண்ட ரஜினி, அக்கதாப்பாத்திரம் பற்றி விரிவாக கேட்டு, அறிந்து கொண்டுள்ளாராம். எனவே இதன் மூலம், ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான மற்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


