ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டிஜே ஞானவேல் இந்த படத்தை இயக்க லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 20) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினி, அனிருத், டிஜே ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஜினிகாந்த், “சில படங்கள் வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த படத்திற்கான டென்ஷன் இருக்கும். அடுத்த கிப்ட் கொடுக்காமல் நிம்மதியாய் இருக்க முடியாது. அதுபோல ஒரு படம் ஹிட்டானாலும் நிம்மதியாக இருக்க முடியாது.
ஒரு படத்தோட வெற்றியை அடுத்த படம் ப்ரேக் பண்ணவில்லை என்றாலும் டென்ஷன் ஆக இருக்கும். ஒரு படம் ஹிட்டாக மேஜிக் இருக்கணும். அந்த மாதிரி ஒரு படம் தான் ஜெயிலர். இதுபோல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது சவாலான ஒரு விஷயம். பெரிய ஹீரோ நடித்தால் மட்டும் அந்த படம் ஹிட்டாகி விடாது. அதற்குக் காரணம் நாம் எந்த இயக்குனர் கூட படம் பண்ணுகிறோம் என்பதும் முக்கியம். மேலும் நல்ல தயாரிப்பாளர்கள் கிடைப்பதும் இன்றுள்ள காலத்தில் கஷ்டமாகிவிட்டது. முன்பெல்லாம் கதை, வசனம், திரைக்கதை, இயக்கம் என அனைத்திற்கும் தனித்தனி ஆட்கள் இருப்பார்கள். ஆனால் இப்போது எல்லாமே ஒரே இடத்தில் இருக்கிறது. அது தான் இயக்குனர். ஜெயிலர் படத்திற்கு பிறகு கதை கேட்பதை விட்டுவிட்டேன். ஒருவேளை கதை பிடிக்கவில்லை என்றால் அந்த இயக்குனருக்கு கஷ்டமாக இருக்கும்.
ஆனால் ஜெய் பீம் படம் பார்த்தபோது மிகவும் பிடித்திருந்தது. எந்த இயக்குனரிடமும் வேலை செய்யாமல் டெக்னிக்கலா நல்ல படம் பண்ணி இருந்தார் ஞானவேல். உண்மையாகவே அவர் மிகவும் திறமையானவர். அதன் பிறகு அவரிடம் கதை கேட்டேன். அந்தப் படம் மாதிரி எனக்கு மெசேஜ் எதுவும் வேண்டாம். கமர்சியலாக வேண்டும் என்று சொன்னேன். 10 நாட்கள் டைம் கேட்ட ஞானவேல் இரண்டே நாட்களில் என்னை தொடர்பு கொண்டு நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாமல் வேறு மாதிரி உங்களை காட்டுகிறேன் என்று சொன்னார். நானும் அதான் வேண்டும் என்று சொன்னேன். சிவாஜி கணேசன் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருப்பார். இயக்குனர் ஞானவேல் 100% அனிருத் தான் வேண்டும் என்று கூறினார்.
நான் 1000% அனிருத் தான் வேண்டும் என்று கூறினேன். பகத் பாசில் இந்த படத்தில் கமிட்டான போது அவருக்கு கால் ஷீட் பிரச்சினை இருந்தது. அவருடைய கால்ஷீட் லோகேஷிடம் இருந்தது. அதன் பிறகு லோகேஷிடம் பேசியபோது பகத் பாசில் ஓகே சொல்லிவிட்டார். வேட்டையன் படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பூஜை போடும்போதே முடிவு செய்துவிட்டோம். லைக்காவின் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தான் ரிலீஸ் தேதியை அறிவிக்க தாமதம் ஏற்பட்டது” என்றார் ரஜினி.
- Advertisement -