சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்பாக இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 30) இரவு 10.30 மணி அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இன்று (அக்டோபர் 1) காலை 6 மணி முதல் மருத்துவர்கள் ரஜினியை பரிசோதித்து வந்தனர். கேத் லாப் மூலம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டங்கள் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது முழு உடல் பரிசோதனை செய்வதற்காக உடலில் இருந்து ரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அதேசமயம் ரஜினியின் அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர் டாக்டர் சாய், டாக்டர் பாலாஜி, டாக்டர் விஜய் ஆகியோரின் தலைமையிலான மருத்துவக்குழு ரஜினியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ரஜினி நலமுடன் இருக்கிறார் எனவும் ஆல் இஸ் வெல் (ALL IS WELL) எனவும் தெரிவித்திருக்கிறார். எனவே நடிகர் ரஜினி இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -