ரஜினிகாந்தின் பயோபிக் படம் இயக்குவது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசியுள்ளார்.
‘ரங்கூன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமிக்கு சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான ராஜ்குமார் பெரியசாமி தற்போது தனுஷின் ஓம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற நவம்பர் 20-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அவரிடம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ராஜ்குமார் பெரியசாமி, “ரஜினிகாந்த் சார் ஏற்கனவே தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய வாழ்க்கையில் பல பரிமாணங்கள் உள்ளன. சாதாரண ஒரு மனிதராகத் தொடங்கி, இன்று மிக சுவாரசியமான ஒரு ஆளுமையாக அவர் உயர்ந்துள்ளார்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு பேருந்து நடத்துநராக இருந்து, திரைப்பட நடிகராக மாறி, இன்று வரை வெற்றிகரமாக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவருடைய பயணம், ஒரு நேர்கோட்டிலான கதைக்களத்துடன் சர்வதேச அளவிலான திரைப்படமாக உருவாகக்கூடிய தகுதி கொண்டது,” என்று குறிப்பிட்டார்.
மேலும் தனது விருப்பத்தைப் பகிர்ந்துகொண்ட ராஜ்குமார் பெரியசாமி, “அவருடைய வாழ்க்கை உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டது. சில பெரிய இயக்குநர்கள் ரஜினிகாந்த் சாரின் பயோபிக்கை எடுக்கக்கூடும். அதற்காக அவர்கள் ஏற்கனவே தயாராகிக்கொண்டும் இருக்கலாம். ஒருவேளை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், நானும் நிச்சயம் அதைச் செய்வேன்,” என்று தெரிவித்துள்ளார். இயக்குநரின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
