இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், படை தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரமணா 2 படம் எடுப்பது குறித்து பேசி உள்ளார்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவின் சகாப்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மதுரவீரன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் சிறிய இடைவெளிக்கு படை தலைவன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை விஜே கம்பைன்ஸ் நிறுவனமும், சுமித் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இதனை அன்பு எழுதி, இயக்க இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கடும்போட்டியின் காரணமாக இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 23ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இன்று (மே 15) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சண்முக பாண்டியன், பிரேமலதா விஜயகாந்த், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மேடையில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், “ஒரு கம்பீரமான கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வளர்ந்து வாங்க. ரமணா 2 எடுப்போம். மீண்டும் கேப்டனை திரையில் காண்பிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
#ARMurugadoss in #PadaiThalaivan Press Meet
– Let’s definitely make #Ramanaa2 soon.
– let’s show our captain Vijayakanth again in screens.pic.twitter.com/BkfKjMRBfv— Movie Tamil (@MovieTamil4) May 15, 2025

மேலும் படை தலைவன் திரைப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அதேசமயம் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது தவிர இந்த படத்தின் டிரைலரில் கேப்டன் விஜயகாந்தின் மூலம் காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.