ஆர் ஜே பாலாஜி தொடக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர். அதைத் தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ஆர் ஜே பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் ஆர் ஜே பாலாஜிக்கு வெற்றி படங்களாக அமைந்தன. அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளராகவும் வலம் வருகிறார் ஆர் ஜே பாலாஜி.
இதற்கிடையில் ஆர் ஜே பாலாஜி, சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல் குறித்த கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “தேர்தலில் நிற்பதும், பிரச்சாரம் செய்வதும் தான் அரசியல் என்றால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். ஒரு தெருவில் அவசியம் இல்லாமல் மரங்களை வெட்டுகிறார்கள். அதை தடுப்பதற்கு குரல் கொடுத்தால் நீங்களும் அரசியல்வாதி தான். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக பள்ளி கட்டணம் கட்டினோம் என்றால் நாமும் அரசியல்வாதி தான். இந்த அரசியலை நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன். இனிமேலும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.