சச்சின் டெண்டுல்கர், சித்தார்த் படத்தை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவரது நடிப்பில் கடந்த ஜூலை 4ஆம் தேதி 3BHK எனும் திரைப்படம் வெளியானது. சித்தார்த்தின் 40வது படமான இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார். இதில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சர் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தங்களின் கனவை ஒற்றுமையாகவும், விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 3BHK படத்தை பாராட்டியுள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர், ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் சமீபத்தில் பார்த்த படத்தில் எந்த படம் உங்களுக்கு பிடித்த படம்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சச்சின், “சமீபத்தில் 3BHK படத்தையும் அட்டா தம்பாய்சா நேய் படத்தையும் பார்த்து ரசித்தேன்” என்று பதிலளித்தார்.

இதற்கு 3BHK படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், “நன்றி சச்சின் சார். உங்களுடைய வாழ்த்து எங்க படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம்” என்று தெரிவித்துள்ளார்.