நடிகை சாய் பல்லவி, பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர், மாரி 2, என் ஜி கே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். இதற்கிடையில் இவர் ரன்பீர் கபூர், யாஷுடன் இணைந்து ராமாயணா எனும் திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அடுத்தது இவர் நாக சைதன்யா உடன் இணைந்து நடித்திருக்கும் தண்டேல் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவி, பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்தை அமீர்கான் தயாரிக்க உள்ளார். சுனில் பாண்டே இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.