கே.ஜி.எஃப் படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், பிரித்திவிராஜ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, பாபி சிம்ஹா, ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சலார். தணிக்கையில் “A” சான்றிதழைப் பெற்றிருந்தது இப்படம். அளவுக்கு அதிகமான வன்முறை, ரத்தம் தெறிக்கும்படியான காட்சிகள் அதிகம் இருப்பதால் பெரியவர்கள் மட்டுமே இப்படத்தைப் பார்க்கலாம் என “A” சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் இளைஞர்களின் பேராதரவால் சலார் திரைப்படம் வெளியான 6 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து கெத்து காட்டியுள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தி ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன. புதிதாக கதை எதுவும் படத்தில் இல்லை எனவும், அரைத்த மாவையே அரைத்து ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார்கள் எனவும் பலரும் இப்படத்தை விமர்சித்து வருகின்றனர். கே.ஜி.எஃப் மாதிரி ஒரு படம் எடுப்பார்கள் என நினைத்தால் கே.ஜி.எஃப் படத்தையே மீண்டும் எடுத்து வைத்துள்ளனர் என்றும் கலாய்த்தனர். இருப்பினும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என நீண்ட விடுமுறை காலம் என்பதாலும் இப்படத்திற்குப் போட்டியாக பெரிய அளவில் கமர்சியல் படங்கள் எதுவும் இல்லை என்பதும் இப்படத்திற்கு நல்ல வசூலுக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது.
சலார் படத்திற்கு ஒரு நாள் முன்பாக வெளியான ஷாருக்கான்-ராஜ்குமார் ஹிராணியின் “டங்கி” ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியாகியிருந்த போதும் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படம் கமர்சியல் படம் இல்லை என்பதால் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படாமல் ஹிந்தியிலேயே திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு வார காலம் தொடர் விடுமுறை காலம் என்பதால் சலார் படத்தின் வசூல் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே செல்லும். பாகுபலி 2 படத்திற்கு பிறகு இந்த சலார் ,பிரபாஸுக்கு மீண்டும் ஒரு ஆயிரம் கோடிப்படமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
- Advertisement -