நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் யசோதா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு சாகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்கள் வெளியானது. அதன் பின்னர் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சில காலம் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். தற்போது சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி இன்று ஏப்ரல் 28 தன்னுடைய 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் சமந்தா. இந்நிலையில் இவர் மா இன்ட்டி பங்காரம் எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சமந்தா கையில் துப்பாக்கியுடன் காண்பிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் போஸ்டரை பார்க்கும்போது படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கும் போல் தெரிகிறது. இந்த படத்தை ட்ராலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் படத்தின் இயக்குனர் யார் என்பதையும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.