நடிகர் சந்தானம் STR 49 படத்தில் காமெடியனாக நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சந்தானம். இவர் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் சந்தானம், சிம்புவின் STR 49 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்ட நிலையில், சந்தானம் மீண்டும் காமெடியனாக களமிறங்குகிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வல்லவன், வாலு, வானம், சிலம்பாட்டம் ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் சிம்பு – சந்தானம் காம்போவை பார்க்க ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சந்தானத்திடம், சிம்பு உங்களை காமெடியனாக நடிக்க கேட்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சந்தானம், “நீங்கள் முன்பு பார்த்த நகைச்சுவை வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. STR 49 படத்திற்காக புதிதாக வடிவமைக்கிறோம். மேலும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவுடன் ஒரு நகைச்சுவை படத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.