சர்தார் 2 படத்தில் டைட்டில் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த படத்தினை பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் அரசியல் பின்னணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. போதைப் பொருள் சம்பந்தமான கதைக்களத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இந்த படம் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதேசமயம் இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட நடிகைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், சர்தார் 2 படத்தில் டைட்டில் டீசர் தயாராகி இருப்பதாகவும் 3 நிமிடங்கள் 39 வினாடிகள் அந்த டைட்டில் டீசர் இருக்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது திரையரங்குகளில் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் திரையிடப்படும் போது இந்த டைட்டில் டீசரை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.