தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாகும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது எனினும் படக்குழுவினர் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ், துசாரா விஜயன், சந்தீப் கிஷன் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ப. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் சமீபத்தில் தனுஷ் திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, D50 படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
அந்த போஸ்டரில் தனுஷ் மொட்டை தலையுடன் மாஸாக இருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட இருப்பதாகவும் அதற்காக பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனுஷின் D50 படத்திற்கு ராயன் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் இதன் படப்பிடிப்பை மூன்று மாதங்களில் முடித்துவிட்டு விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
ஏற்கனவே செல்வராகவன் தனுஷின் நடிப்பில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான பகாசூரன் என்ற படத்தில் செல்வராகவன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் இயக்கம் புதிய படத்தில் செல்வராகவன் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.