சண்முகபாண்டியனின் படை தலைவன் பட ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் சகாப்தம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவரது நடிப்பில் கொம்பு சீவி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இது தவிர இவர், படை தலைவன் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விஜே கம்பைன்ஸ், சுமித் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இசைஞானி இளையராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் அன்பு இதனை எழுதி, இயக்கியுள்ளார். யானை ஒன்றை மையமாக வைத்து காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்முக பாண்டியன் உடன் இணைந்து கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதே சமயம் இந்த படமானது நாளை (மே 23) உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கூட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால் இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக நடிகர் சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இனிவரும் நாட்களில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.