நடிகர் சாந்தனு சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு ‘வேட்டிய மடிச்சு கட்டு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பின்னர் சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், சித்து +2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, இராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் சாந்தனுவுக்கு எந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மேலும் நெட்ப்ளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் வெப் தொடரின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்த ‘தங்கம்’ என்ற சிறுகதை திரைப்படத்தில் சாந்தனுவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இது சாந்தனுவின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான வெற்றியாக அமைந்தது. தற்போது சாந்தனு, ஷேன் நிகாமுடன் இணைந்து ‘பல்டி’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 26ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சாந்தனு, கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சாந்தனுவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2024-ம் ஆண்டு அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.