ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜயின் 69 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்துருக்கும் விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே படமானது 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் இருப்பதாகவும், ஒவ்வொரு குடிமகனின் வாக்குகள் மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி கூறுவது தான் இப்படத்தின் கதை எனவும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் விஜய் அரசியல், மாநாடு என கலக்கி வருகிறார். குறிப்பாக ஒவ்வொரு மேடையிலும் ஆளுங்கட்சியை தாக்கி பேசி வருகிறார் விஜய். இவ்வாறு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், திமுகவிற்கும் கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை, சன் டிவி ரூ.55 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏன் சன் டிவி நிறுவனம் ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றி இருக்கிறது? என்பது தொடர்பான கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாக விவாதித்து வருகின்றனர். மேலும் ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 121 கோடிக்கு வாங்கியுள்ளது எனவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.