நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் 3, பூஜை, சிங்கம் 3, புலி, வேதாளம் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 5) ஐதராபாத்தில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
அதன்படி நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கூலி படத்தில் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேசமயம் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் இவருடைய கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -