தனது மதுப்பழக்கம் குறித்து ஸ்ருதி ஹாசன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். டிசம்பர் 22-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து ஹாலிவுட்டிலும் ‘The Eye’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் நானி நடிப்பில் வெளியான ஹாய் நான்னா படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதி ஹாசன், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். என் வாழ்நாளில் 8 ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாகி இருந்தேன். அந்த நாட்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கும் மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் இணைந்து குடிப்பதை விரும்புவேன். ஆனால், போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாட்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்தது. பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது தன் வாழ்வில் ஒரு கட்டம். பலரும் இதை கடந்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கின்றனர். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார். ஸ்ருதியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.