சசிகுமார் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனராக தனது திரைப் பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் இவர் இயக்கியிருந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த சசிகுமார், நாடோடிகள், சுந்தர பாண்டியன், கிடாரி போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். கடந்தாண்டு வெளியான அயோத்தி திரைப்படத்தில் சசிகுமார் நடித்திருந்த நிலையில் இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து எவிடன்ஸ், ஃப்ரீடம் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இருப்பினும் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் எந்த படங்களுமே ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் சசிகுமாரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து சசிகுமாருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சசிகுமார் நடிக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருக்கிறார். குடும்பப் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் அழுத்தமான சமூக கருத்து சொல்லப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -