Homeசெய்திகள்சினிமாபிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பிறந்தநாள்... ரசிகர்கள் வாழ்த்து...

பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பிறந்தநாள்… ரசிகர்கள் வாழ்த்து…

-

இந்திய சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வலம் வரும் சங்கர் மகாதேவனின் பிறந்தநாளையொட்டி, திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சங்கர் மகாதேவன், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இசையின் மீது இருந்த காதலால், சிறு வயதிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானிய இசையை பயின்றார். ஒரு பக்கம் இசை கற்றுக்கொண்ட சங்கர், மற்றொரு பக்கம் பொறியியல் பட்டமும் பெற்றார்.
பட்டம் பெற்றபின், ட்ரிஜின் என்ற நிறுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். இருப்பினும் இசை மீது இருந்த ஆர்வத்தால், கலைத்துறை பக்கம் சென்றார். அதோடு, மாடலிங்கிலும் களம் இறங்கி வெற்றி கண்டார். 1998-ம் ஆண்டு ப்ரீத்லெஸ் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். இது இந்தியா முழுவதும் சென்சேசன் ஆனது.

இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு முதல் வாய்ப்பு வந்தது. இந்தியில் பல பாடல்களை பாடி இசை அமைத்த அவர், தமிழ், தெலுங்கு பக்கமும் வந்தார். தமிழில், மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் தான் முதன்முதலாக பாடினார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். இந்த மூவரின் கூட்டணியும் திரையில் மேஜிக் நிகழ்த்தியது. பம்பாய் படத்தின் வெற்றியும், பாடல்களின் ஹிட்டும், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய காரணமாக அமைந்தன. இதைத் தொடர்ந்து தமிழில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் என அனைத்து தரப்பு இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இடம்பெற்ற என்ன சொல்ல போகிறாய் என்ற பாடலை பாடியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி பிலிம்பேர் விருதுகள், ஆந்திரா மற்றும் கேரள மாநில விருதுகள் என பல விருதுகளை வென்றுள்ளார். அண்மையில் கிராமி விருதையும் வென்றார். இப்படி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும், பெரும் புகழையும் தக்க வைத்திருக்கும் பாடகர் சங்கர் மகாதேவன் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ