Homeசெய்திகள்சினிமாமறைந்தாலும் இசையாய் மலர்வேன்... பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் பிறந்த தின சிறப்புப் பதிவு!

மறைந்தாலும் இசையாய் மலர்வேன்… பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் பிறந்த தின சிறப்புப் பதிவு!

-

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் 77வது பிறந்தநாள் இன்று. இசைக்கு என்றுமே அழிவு இல்லை, அதுபோல தான் இசை மூலம் மக்களை மகிழ்வித்தவர்களுக்கும் என்றுமே மறைவு என்ற ஒன்றே கிடையாது.

இசைக்கு மயங்காதோர் உண்டோ இவ்வுலகில். அதுபோல எஸ்பிபி-யின் குரலுக்கு மதி மயங்காதோரும் யாருமில்லை.

எஸ்பி தான் வாழ்நாளில் பேசிய பேச்சுக்களின் எண்ணிக்கையை விட அவர் பாடிய பாடல் வரிகள் தான் அதிகம் இருக்கும் என்பது நிச்சயம்.

எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். இளம் வயதிலேயே பாடகராக தன் வாழ்வைத் தொடங்கிய
எஸ்பிபி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 1966 இல் தொடங்கி 2020 வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையையும் தன்னகத்தே கொண்டவர் எஸ்பிபி.

முதன்முதலாக ‘சாந்தி நிலையம்’ படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் மூலம் தன் பாடகர் பயணத்தைத் துவங்கினார் எஸ்பிபி. ஆனால் இப்பாடல் வெளிவரும் முன்பே எம்ஜிஆர் நடித்த ‘அடிமைப்பெண்’ ஆயிரம் நிலவே வா என்ற பாடல் வெளிவந்தது.
இவ்வாறு எம்ஜிஆர், ஜெமினி, கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன்,மோகன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார். இவரின் குரல் அனைத்து நடிகர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் எஸ்பிபி முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை இருந்த போதிலும் ‘சங்கராபரணம்’ என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். மேலும் இவர் ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இவர் இளையராஜாவின் இசையில் உள்ளத்தை உருக்கும் ஏராளமான பாடல்களை பாடி தன் குரலினால் அனைவரையும் உருக வைத்தவர்.
இவர் பி சுசிலா, எஸ் ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி,வாணி ஜெயராம் போன்ற பின்னணி பாடகிகளுடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.

பாடும் நிலா என்று பலராலும் அழைக்கப்படும் இவர் மூச்சு விடாமல் பாடுவதில் வல்லமை படைத்தவர். இன்றளவும் ரஜினி படங்களுக்கு ஓப்பனிங் சாங் என்றாலே நம் நினைவுக்கு வருவது எஸ்பிபி தான். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலை மூச்சு விடாமல் அவர் பாடியதை எண்ணிப் பார்க்கையில் நமக்கு மூச்சடைக்கிறது.

மேலும் இவர் பாடும் நிலாவாக மட்டுமல்லாமல் நடிப்பு நாயகனாகவும் திகழ்ந்தவர். அந்த வகையில் இவர் முதன்முதலாக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகராகவும் மக்கள் மனதைக் கவர்ந்தார். மேலும் இவர் காதலன், திருடா திருடா, பிரியமானவளே, சிகரம், குணா, தலைவாசல், காதல் தேசம், உல்லாசம் உள்ளிட்ட பல படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
எஸ் பி பி, எவரும் சாதிக்க முடியாததை சாதித்து திரை உலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் இந்திய திரையுலகில் செழுமையான வாழ்க்கையை தனது கடினமான உழைப்பால் உருவாக்கிக் கொண்டவர்.

இவ்வாறு இனிமை நிறைந்த உலகில் ஆயிரம் நிலவுகளுக்கு மத்தியில் இளையநிலாவாகத் தோன்றி பாடும் நிலாவாக உருவெடுத்து, தேன் சிந்தும் வானத்தில் சங்கீத மேகங்களுக்கு நடுவில் சின்ன புறா ஒன்றைப் போல தன் குரல் சிறகை விரித்து பறந்து சென்று, நிலவு தூங்கும் நேரத்தில் நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என்று சத்தம் இல்லாத தனிமையில், ரோஜாவை தாலாட்டும் தென்றலோடு கலந்த அந்தி மழையாய் பொழிந்து ராகங்கள் பதினாறும் உருவான வரலாறை விளக்கி, தேகம் மறைந்தாலும் இசையாய் எங்கும் மலர்ந்து கொண்டிருக்கும் மூச்சும், பாட்டும் அணையாத விளக்காக பனி விழும் மலர் வனத்தினுள் நுழைந்து சொர்க்கத்தின் வாசல் வழியே சென்று கடவுள் அமைத்து வைத்த மேடையில் நின்று அங்கும் தனக்கென தனி இசை உலகத்தை அமைத்து அதில் ஒருவனே முதலாளி என்று தன் காந்த குரலால் மண்ணுலகை ஆண்டு வெற்றி மீது வெற்றி கண்டது போதாதென விண்ணுலகையும் தன் குரலால் ஆளச் சென்ற இசையாகவே வாழ்ந்து மக்கள் மனதில் இருந்து என்றும் மறையாத எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை போற்றி புகழ்வோம் ஆக.

MUST READ