ஆர்யன் மற்றும் ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்களின் நான்கு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ திரைப்படமும், ரியோ ராஜின் ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படமும் வெளியானது. அதில் ‘ஆர்யன்’ திரைப்படம் ‘ராட்சசன்’ படத்தை போல் கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகியிருந்தது. விஷ்ணு விஷாலுடன் இணைந்து செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா மற்றும் பலர் நடித்திருந்தனர். பிரவீன் கே இயக்கியிருந்த இந்த படம் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் செல்வதால் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் ‘ராட்சசன்’ பட அளவுக்கு இல்லை என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ.4.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்தது ரியோ ராஜின் ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் அதிகரித்து வருகிறது. அதன்படி இப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்த படத்தில் ரியோ ராஜ் மாளவிகா மனோஜ், ஜென்சன் திவாகர், விக்னேஷ் காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


