காந்த குரல் மன்னன் எஸ்.பி.பியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 25).
கோடான கோடி மக்களை தனது இனிமையான குரலினால் கட்டிப் போட்டவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். வசீகர குரல் என்றாலே நம் நினைவுக்கு வருவது எஸ்பிபி தான். கிட்டத்தட்ட 40 வருடங்கள் சினிமாவில் பணியாற்றிய இவர் 40000க்கும் மேலான பாடல்களை பாடி பல விருதுகளை வென்றவர். அந்த வகையில் 6 முறை தேசிய விருது வென்ற பெருமை உடையவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன், தமிழக அரசின் கலைமாமணி விருது, ஆந்திரா அரசின் நந்தி விருது போன்ற விருதுகளும் இவரால் பெருமை அடைந்தன. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் சமஸ்கிருதம் என கிட்டத்தட்ட 16 மொழிகளில் அம்மொழிக்குச் சொந்தக்காரர் போலவே எந்தவித பிழையும் இன்றி பாடும் அசாத்திய கலைஞர்.அதேசமயம் மூச்சு விடாமல் பாடுவதிலும் வல்லவர். அன்றைய இசையமைப்பாளர் விஸ்வநாதன் முதல் இன்றைய இசையமைப்பாளர்கள் ஜி.வி. பிரகாஷ், அனிருத் வரை அனைவரின் இசையிலும் அவர்களின் இசைக்கேற்ப பாடல்களைப் பாடி அசத்தியிருக்கிறார். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்திருந்தாலும் இவருடைய தேன் குரல், காந்த குரல், வசீகரக் குரல் என்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதாவது வானில் எத்தனை நட்சத்திரங்கள் தோன்றி மறைந்தாலும் என்றும் மறையாத நட்சத்திரமாக நம் அனைவரின் மனதிலும் ஜொலிப்பவர் எஸ்.பி.பி. மேலும் இவர் பாடகர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை உடையவர். இவ்வாறு எஸ்.பி.பி -யின் பெருமைகளை கூற இந்த ஒரு கட்டுரை போதாது என்றாலும் அவருடைய நினைவு தினமான இன்று (செப்டம்பர் 25) அவருடைய நினைவுகளை எண்ணி பெருமைப்படுவோம்.