பிரபல நடிகரான சிவகார்த்திகேயன், சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகத் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து இவரின் அயலான் திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இவர் தனது 21 வது படமான SK21 படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் பாலீவுட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
ரஜினி, கமலுக்குப் பிறகு தனுஷும் விஜய் சேதுபதியும் பாலிவுட்டில் தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பிரபல பாலிவுட் இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற மாவீரன் படத்தின் தெலுங்கு ( மகாவீருடு) ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்வி சேஷ், “பெரிய மனது கொண்ட பெரிய நட்சத்திரம் விரைவில் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்” என்று பேசிவிட்டு சிவகார்த்திகேயனை பார்த்து “சாரி சார், இந்த செய்தியை பிரேக் செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பது உறுதியாகிவிட்டது.
ஆதலால், சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்து மிகப்பெரிய ஸ்டாராக வலம் வரும் சிவகார்த்திகேயன் விரைவில் ஒரு பான் இந்திய நடிகராக மாறப்போகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


