நடிகர் சிவகார்த்திகேயன் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் ரூ. 11 கோடி பரிசுத்தொகை குகேஷுக்கு வழங்கப்பட்டது. 18 வயதுடைய குகேஷ் இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், குகேஷை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் குகேஷுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார் சிவகார்த்திகேயன். மேலும் சிவகார்த்திகேயன் – குகேஷ் இருவரும் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து பிரம்மாண்ட வெற்றி கண்டார். இதைத்தொடர்ந்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சிவகார்த்திகேயன், இவ்வளவு பிசியான நேரத்திலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த குகேஷை நேரில் அழைத்து பாராட்டியது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் இந்த செயல், மற்ற இளைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.