சிவகார்த்திகேயன் பட நடிகை விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் தற்போது கிங்டம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற மே 30ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி VD 14 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்கப் போவதாகவும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டிலேயே இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்தது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஏனென்றால் அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா, உடல் முழுவதும் காயங்களுடன் ஆன்மீக இடத்தில் தியானத்தில் இருப்பது போன்று கட்டப்பட்டிருந்தது. எனவே இது என்ன மாதிரியான கதையாக இருக்கும்? என்று ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஆகிய இருவரும் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில், மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வந்தது.
ஆனால் தற்போது கிடைக்க தகவல் என்னவென்றால், தமிழ் சினிமாவில் டாக்டர், டான் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.