சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இவரது நடிப்பில் ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு வெளியான போதிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் விஷால் ‘மகுடம்’ படத்தில் கவனம் செலுத்தியதால் சுந்தர்.சி – விஷால் கூட்டணியிலான புதிய படம் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த புதிய படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் மாதத்தில் இப்புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என நம்பப்படுகிறது.

மேலும் ‘மதகஜராஜா’ படம் திரைக்கு வருவதற்கு முன்பாக நடிகர் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’, ‘ஆக்சன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.