சுந்தர். சி – குஷ்புவின் மகள்கள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 1995ஆம் ஆண்டு ‘முறை மாமன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர். சி. அதை தொடர்ந்து இவர் அருணாச்சலம், வின்னர், அரண்மனை, கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா, கேங்கர்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இது தவிர நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதேபோல் நடிகை குஷ்பு, ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர்.சி – குஷ்புவின் மகள்களான அனந்திதா மற்றும் அவந்திகா ஆகிய இருவரும் சினிமாவில் அறிமுகமாக இருக்கின்றனர் என தகவல் கசிந்துள்ளது. அதன்படி இவர்களின் மூத்த மகள் அவந்திகா நடிப்பு பயிற்சியை முடித்துவிட்ட நிலையில் புதிய படம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இளைய மகள் அனந்திதா தான் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் இதனை சுந்தர்.சி தயாரிக்க உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

திரைத்துறையில் நட்சத்திரங்களின் வாரிசுகள் கால் பதித்து வெற்றி பெற்று வரும் நிலையில் சுந்தர்.சி – குஷ்புவின் மகள்களும் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.